தமிழ்நாடு

போராட்டத்திற்கு சாலைகளில் இறங்கிய மாணவர்கள்...

வடபழனியில் மாணவர்கள் தங்களது அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாததை எதிர்த்து சாலையில் இறங்கி போராட்டம் செய்தனர்.

Malaimurasu Seithigal TV

சென்னை : வடபழனியில் அரசு விடுதி மாணவர்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் செய்தனர். தங்களது விடுதிகளில் தேவையான எந்த ஒரு அடிப்படை வசதிகளும் தங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும், உணவு முதல் இருக்கும் இடம் வரை அனைத்துமே மிக மோசமாக அமைந்திருப்பதாக தெரிவித்த மாணவர்கள், ஐந்தாண்டுகளாக தாங்கள் தங்கியிருந்த விடுதியின் கட்டண பணத்தை திருப்பி தருமாறும், விடுதியை சீறமைக்கக் கோரியும் போராட்டம் நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வடபழனி அருகே அரசு விடுதியில் ஆண் மாணவர்கள் பலர் தங்கி வருகின்றனர். வீட்டில் இருந்து தங்கி படிக்க முடியாதவர்களும், வீட்டில் போதிய வசதி இல்லாதவர்களும், தங்களது படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில், வடபழனியில் உள்ள அரசு விடுதியில், அடிப்படை வசதிகளான, உணவு, கதவு, ஏன், தண்ணீர் கூட மிக மோசமாக இருப்பதாக மாணவர்கள் கோஷமிட்டனர். மேலும், ஆர்.ஓ குடிநீரில், புழுக்கள் மிதக்கும் வீடியோவும் சமீபத்தில் மோபைல்கள் மூலம் வைரலான நிலையில், இது குறித்த சர்ச்சை வெடித்தது.

மேலும், சாம்பாரை தண்ணீர் போலவும், தோசைகள் கருகி கட்டை போலவும் இருப்பதாக தெரிவித்த மாணவர்கள், தனக்குக் கொடுக்கப்படும் இந்த மோசமான தோசைகள் கூட அளவாகத் தான் கொடுக்கப்படுவதாகவும் கூறினர்.

தொடர்ந்து, ஐந்து மணி நேரம் வகுப்பில் கவனிக்க வேண்டி இருக்கும் நிலையில், வெறும் 3 தோசைகள் அதுவும் கருகிய கட்டைகள் போல இருக்கும் இந்த தோசைகள் எப்படி போதும்? என கேள்விகள் எழுப்பினர்.

மேலும், தண்ணீர் பற்றாக்குறை, கதவுகள் இல்லாத கழிவறை என அனைத்தும் மிக மோசமான நிலையில் இருப்பதாக மாணவர்கள் கவலையாக கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து, காவலர்கள் அங்கு கூடிய நிலையில், “பத்து குறைகளைக் கூறுங்கள், உங்களது குறைகளில் குறைந்தது 5 குறைகளை நாங்கள் தீர்த்து வைக்கிறோம்” போலீசார் வலியுறுத்தியும் போராட்டம் கலையாததாகத் தெரிகிறது.

ஆனால், பல முறை வலியுறுத்திய காரணத்தால், மாணவர்கள் தங்களது போராட்டங்களை கைவிட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால், அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதோடு பொது மக்களுக்கு அவதியும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.