தமிழ்நாடு

மீண்டும் சீல் வைக்கப்படுமா...? ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்தியது ஸ்டெர்லைட்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில்,  ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தி ஆலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி போராட்டம் வெடித்தது. இதுதொடர்பாக ஏற்பட்ட வன்முறை மற்றும் கலவரத்தில்   13 பேர்  போலீசாரால் குறிவைத்து  சுடடுக் கொல்லப்பட்டனர்.  இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டதை அடுத்து  ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தடை விதித்து சீல் வைக்கப்பட்டது. 
இதனிடையே கொரோனா 2 ஆம் அலையில்  நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல்  பற்றாக்குறை ஏற்பட்டதால் , ஆக்சிஜன்  உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டது.  ஜூலை 31ஆம் தேதி வரை ஆக்சிஜன் உற்பத்திற்கு  உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
உச்சநீதிமன்றம் வழங்கிய அனுமதி  இன்றுடன் நிறைவடையும் நிலையில்  ஸ்டெர்லைட் ஆலையில் ஆஜ்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக அதன் நிர்வாகம் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  
ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதியை  நீட்டிக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், 3வது அலை எச்சரிக்கை காரணமாக அவகாசம் வழங்கப்படுமா அல்லது இன்றுடன் மூடி சீல் வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக தமிழகத்தில் ஆக்சிஜன்  பற்றாக்குறை இல்லை என்பதால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்திக்காக வழங்கப்பட்ட அனுமதியை நீடிக்க கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது குறிப்பிடதக்கது.