தமிழ்நாடு

"ஸ்டெர்லைட் உரிமையாளரை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க கூடாது. மீறி அனுமதித்தால்..." திருமுருகன் காந்தி ஆவேசம்

Malaimurasu Seithigal TV

ஸ்டெர்லைட் - வேதாந்தா நிறுவனத்தின் உரிமையாளர் தமிழ்நாட்டிற்கு வருவதை அனுமதிக்க கூடாது என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மீறி தமிழ்நாட்டிற்கு வந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட்- வேதாந்தா நிறுவனத்தின் உரிமையாளர் அனில் அகர்வால் தமிழ்நாட்டிற்கு அடுத்த மாதம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள சுரானா ஹைடெக் பள்ளி திறப்பு விழாவில் கலந்து கொள்ள சென்னை வர இருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. 

இதில் பேசிய திருமுருகன் காந்தி ஸ்டெர்லைட்க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு முழுக் காரணமாக இருக்கும் சூழலியல் குற்றவாளியும் மனித குல விரோதயுமான அந்நிறுவன உரிமையாளர் அனில் அகர்வால் தமிழ்நாட்டிற்கு வருவது தமிழர்களுக்கு அவமானம். ஸ்டெர்லைடுக்கு எதிரான நீண்ட கால போராட்டத்தை கொச்சைபடுத்தும் விதமாக இது அமையும் என்றார்.

எனவே, அவரை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க கூடாது. மீறி அனுமதித்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும், சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு இது வழிவகுக்கும் என தெரிவித்தார். மேலும் திமுக எதிர்கட்சியாக இருந்த போது ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதாரவு அளித்ததாகவும் எனவே அனில் அகர்வாலை தமிழகத்தில் திமுக அரசு அனுமதிக்காது என நம்பிக்கை தெரிவித்த அவர், ஸ்டெர்லைட்டை மூடுவது தொடர்பாக சிறப்பு தீர்மானமும் சட்டமும் இயற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தினார்.

அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி காட்சி தமிழக தலைவர் வசீகரன், தமிழகத்தில் மீண்டும் ஸ்டெர்லைட் நிறுவனம் செயல்பட வெண்டும் என்று மத்தியில் உள்ள பாஜக அரசு செயல்படுகின்றது. இங்கு அணில் அகர்வாலுக்கு ஆதரவு இருப்பதால் தான் அவர் வருகை தர இருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகும் அணில் அகர்வாலின்  செயல்பாடுகளால் துக்குகுடியில் பல்வேறு குழப்பங்களை உருவாக்கி வருகிறது என தெரிவித்தார்.