தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீப காலமாகவே, ஆளுநர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதுவும் நிகழ்ச்சிகளில் அவர் பேசும் கருத்துக்கள் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கார்ல் மார்க்ஸ் பற்றி பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கார்ல் மார்க்ஸ் இந்தியாவின் சமூக கோட்பாடுகளை சிதைக்க வேண்டும் என கட்டுரை எழுதியுள்ளதாகவும், அவருடைய சிந்தனை இந்தியாவை சிதைத்துள்ளதாகவும், இன்று மார்க்ஸின் தத்துவம் புறந்தள்ளப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் பேசியது கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அக்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது வாய்க்கொழுப்பை அடக்காவிட்டால் தமிழ்நாட்டில் நடமாட முடியாத நிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், காரல் மார்க்ஸ் குறித்து தமிழ்நாடு ஆளுநர் பேசியதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 28ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.