தமிழ்நாடு

மாநிலங்களவை தேர்தல்.. வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு!!

மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மனுத்தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது.

Suaif Arsath

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவைக்கு ஜுன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில்  திமுக, அதிமுக, காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் திமுக வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களுடன் அளித்த பிரமாண பத்திரத்தில், அசையும், அசையா சொத்துக்களின் விவரங்களை அளித்துள்ளனர்.

அதன் படி, தஞ்சையைச் சேர்ந்த திமுக வேட்பாளர் எஸ்.கல்யாணசுந்தரம் தான் வெளியிட்டுள்ள சொத்து விவரங்களின் படி 43.46 லட்சம் ரூபாய் மதிப்பு அசையும் சொத்துக்களும், அவரது இரு மனைவிகள் பெயரில், 113 சவரன் தங்கம், வைர நகைகள் உட்பட 67.76 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கல்யாண சுந்தரம் பெயரில் 3.46 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களும், மனைவிகள் பெயரில் 1.39 கோடி மதிப்புள்ள அசையாச் சொத்துக்கள் உள்ளதாகவும், கல்யாணசுந்தரம் பெயரில் 4.53 லட்சம், மனைவிகள் பெயரில் 20.76 லட்சம் கடன் இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர் கிரிராஜன் பெயரில் 1.53 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள், 5.12 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களும், மனைவி பெயரில் 1.04 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள், 39.47 லட்சம் மதிப்பு அசையா சொத்துக்கள் உள்ளதாகவும், கிரிராஜன் பெயரில் 3.17 கோடி மதிப்பு கடன், மனைவி பெயரில் 2.87 கோடி மதிப்பு கடன் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் பெயரில் 17.15 லட்சம் அசையும் சொத்துக்கள், 78.08 லட்சம் மதிப்பு அசையா சொத்துக்களும், மனைவி பெயரில் 27.07 லட்சம் அசையும் சொத்துக்களும், 47.40 லட்சம் மதிப்பு அசையா சொத்துக்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்தின் பெயரில் 32 கிராம் தங்கம், 3.25 கேரட் வைரம் உட்பட,135 கோடி அசையும் சொத்து உள்ளது என்றும் பரம்பரை சொத்து உட்பட 5.83 கோடி மதிப்பு அசையா சொத்துக்கள், 76.46 லட்சம் கடன் உள்ளதாகவும், அவரது மனைவி பெயரில் ஆயிரத்து 457 கிராம் தங்கம், 76.71 கேரட் வைரம் உட்பட 17.39 கோடி அசையும் சொத்து, 26.53 கோடி மதிப்பு அசையா சொத்து, 5 கோடி கடன் ஆகியவை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகம் பெயரில், 8.76 லட்சம் மதிப்பு அசையும் சொத்து, 18.45 லட்சம் மதிப்பு அசையா சொத்து மற்றும் மனைவி பெயரில் 27.22 லட்சம் மதிப்பு அசையும் சொத்து, 2.10 கோடி மதிப்பு அசையா சொத்து, தாயார் பெயரில் 61.84 லட்சம் மதிப்பு அசையும் சொத்து ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர் தர்மர் பெயரில், 14.49 லட்சம் மதிப்பு அசையும் சொத்து, 62.37 லட்சம் மதிப்பு அசையா சொத்து, மனைவி பெயரில் 17.09 லட்சம் மதிப்பு அசையா சொத்து, மகள்கள் பெயரில் 36.05 லட்சம் அசையும் சொத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.