முத்திரைத்தாள் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்துவதற்கான சட்டத்திருத்த முன்வடிவை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவில், 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது. மேலும் நீதித்துறை அல்லாத முத்திரைத்தாள் அச்சிடுவதற்கான செலவு பன்மடங்காக அதிகரித்திருப்பதால், முத்திரைத்தாள் கட்டணத்தை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. சட்டத் திருத்த முன்வடிவில் நூறு ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் ஆயிரம் ரூபாயாகவும், 20 ரூபாய் முத்திரைதாள் கட்டணம் 200 ரூபாயாகவும் மாற்றியமைக்கப்படுகிறது.
இதே போல, நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தம் மற்றும் சங்க பதிவுகளுக்கான 5 லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலான முத்திரைத்தாள் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டமுன்வடிவுக்கு ஆரம்பநிலையிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் நாகை மாலி எதிர்ப்பை பதிவு செய்தார்.