Administrator
தமிழ்நாடு

ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு கைது! ரகசிய இடத்தில் வைத்து விசாரணை!

சென்னை விமான நிலையத்தில் வைத்து ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Saravanan

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 28-ந்தேதி பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பள்ளியின் மேலாண்மைக் குழுவின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த நிகழ்ச்சிக்கு ஆன்மிக சொற்பொழிவாளர் மகா விஷ்ணு சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டு இருந்தார். நிகழ்ச்சியின் போது, மாணவர்கள் மத்தியில் பேசிய மகா விஷ்ணு, பாவ புண்ணியத்தின் அடிப்படையில் தான் மறு பிறப்பு அமையும் என்றும் மாற்றுதிறனாளியாக பிறப்பு குறித்தும் அவர் பேசியிருந்தார்.

அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கரிடம், அவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. மகா விஷ்ணுவின் பேச்சு சர்சையானது. இதனையடுத்து மகா விஷ்ணுவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இது குறித்து விசாரிக்க பள்ளிக் கல்வித் துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியிருந்தார். இதனையடுத்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரைமுறைபடுத்த புதிய வழிமுறைகளை வெளியிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மகா விஷ்ணு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சர்ச்சை பேச்சு தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மகா விஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக ஆன்மீகப் பேச்சாளர் மகா விஷ்ணு வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்திருந்தார். அதில், தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும், போலீசாரிடம் நேரில் விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று சென்னை திருப்பிய மகா விஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் சித்ரகலா, ஆன்மீகப் பேச்சாளர் மகா விஷ்ணுவின் நிகழ்ச்சிக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை தெரிவித்துள்ளார்.