தென்ஆப்ரிக்காவில், 36 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 1,088 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், இணையத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
தென் ஆப்ரிக்காவை சேர்ந்தவர் செல்லோ அப்ரம் மாபுன்யா. 33 வயதான இவர், வீடுகளில் திருடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். மேலும் வீடுகளில் திருடும்போது, அங்கிருக்கும் இளம்பெண்களை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுவரை அவர் 36 பெண்களிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
அவர் ஒரு வீட்டில் இதேபோல் பூட்டை உடைத்து திருடும் முயற்சியில் ஈடுபட்டபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றச்சாட்டினை முன்வைத்து பெண் வழக்கறிஞர் ஒருவர் வாதாடி வந்தார். இந்நிலையில் செல்லோ அப்ரம் மீதான வழக்கினை விசாரித்த அந்நாட்டு பிரிட்டோரியா நீதிமன்றம் அவருக்கு 1,088 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயுள் தண்டனையும் விதித்துள்ளது.
இதனை வரவேற்ற தென்ஆப்ரிக்க மக்கள் மற்றும் நீதிமன்ற வழக்கறிஞர் செல்லோவுக்கு எதிரான வழக்கில் வெற்றிப்பெற்ற பெண் வழக்கறிஞரை வெகுவாக பாராட்டியுள்ளனர்.