தமிழ்நாடு

ஜிஎஸ்டியில் இருந்து சினிமா தொழிலுக்கு வரி விலக்கு வேண்டும்..! இயக்குநர் பேரரசு வேண்டுகோள்..!

தியேட்டர்கள் நிரம்பி வழியும் சூழல் ஏற்படும்..!

Malaimurasu Seithigal TV

கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட துறைகளில் மிகவும் அடிவாங்கியது என்றால் அது திரைத்துறை எனலாம். ஏனென்றால் இந்தத் துறையில் இருப்பவர்களுக்கு அதைத் தவிர பிற எந்த வித தொழிலிலும் இருந்திருக்க மாட்டார்கள். தயாரிப்பாளர்கள், டெக்னீஷியன்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என பலரும் பல விதங்களில் நஷ்டத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்தனர். கொரோனாவால் இறந்து போன கலைஞர்கள், சினிமா துறையினர் என ஏராளம் உண்டு. 

நம்மை மகிழ்விக்க, பொழுதை கழிக்க கஷ்டப்பட்டவர்கள், கொரோனா காலகட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்த சூழலில் அரசு சார்பிலும், பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள், தனது துறையை சேர்ந்த நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்தனர். அந்த வரிசையில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த திரைப்பட இயக்குனரும்,தயாரிப்பாளருமான கலப்பை மக்கள் இயக்க தலைவர். பி.டி. செல்வகுமார் கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். 

அவரது உதவியை பாராட்டும் வகையில், குமரி மாவட்டம் தோவாளையில் உள்ள லயோலா பொறியியல் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு, பி.டி.செல்வகுமாருக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் திரைப்பட துறையை கொரோனா ஊரடங்கு கடுமையாக பாதித்திருப்பதாகவும், குறிப்பாக திரைப்பட தயாரிப்பாளர்கள், டெக்னீஷியன்கள், ஹீரோக்கள் கடும் பாதிப்பை சந்தித்திருப்பதாகவும் தெரிவித்தார். 

எனவே கொரோனா முடிந்து ஓராண்டு வரை திரைப்படத் துறையினருக்கு ஜிஎஸ்டி யிலிருந்து வரிவிலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். என்னதான் வீட்டில் சிலைகள் இருந்தாலும், கோவிலுக்கு சென்று வழிபட்டால் தானே திருப்தி ஏற்படும், அதுபோல ஓடிடியில் திரைப்படங்கள் வெளியிடப்படும் இந்த சூழல், மாறும் எனவும், மீண்டும் மக்கள் தியேட்டர்களில் வந்து படம் பார்த்து மகிழும் சூழல் ஏற்படும் என்றார்.