ஆளுநருக்கு ஆதரவு தெரிவித்து, தமிழக அரசுக்கு தனது ட்விட்டர் மூலம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுநர் உரை :
நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றிருந்த “திராவிட மாடல்”, அமைதி பூங்கா தமிழ்நாடு போன்ற வார்த்தைகளை குறிப்பிடாமல் உரையை ஆளுநர் வாசித்தார்.
ஆளுநருக்கு எதிராக தீர்மானம் :
இதையடுத்து, தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்றும், உரையில் ஆளுநர் சேர்த்து படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து, ஆளுநர் தாமாக பேசிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார்.
இதையும் படிக்க: ”பேரவை மரபு, நாகரீகத்தை மதிக்காத ஆளுநர்” - ராமதாஸ் ட்வீட்!
பேரவையில் இருந்து வெளியேறிய ஆளுநர் :
இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இதையடுத்து ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சட்டப்பேரவைக்கு அவமானம் :
இந்நிலையில், ஆளுநர் ரவியின் உரைக்கு திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இடையூறு செய்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஆளுநரின் உரைக்கு இடையூறு செய்ததன் மூலம் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சட்டப்பேரவைக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து, உண்மைக்கு புறம்பான உரையை வாசிக்க வேண்டும் என ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என்றும், திராவிட மாடல் என ஆளுநர் வாசிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது சரியல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி எழுப்பிய அண்ணாமலை :
தமிழகத்தில் அண்மைக் காலமாக பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் தற்கொலை நிகழ்வுகள் அரங்கேறி வருவதாகவும், அப்படி இருக்கும் போது, தமிழகம் அமைதியின் உறைவிடாக திகழ்கிறது என ஆளுநர் எப்படி குறிப்பிடுவார் என்றும், ஆளுநர் கருத்துக்களை, சட்டசபை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதா? ஆளுநர் உரையை சட்டசபை குறிப்பில், எப்படி இடம்பெற வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியது தவறானது. கண்ணியத்துக்கு மாறாக முதல்வரே நடந்து கொண்டதால், ஆளுநர் அவையில் இருந்து வெளியேற நேரிட்டது. ஆளும் கட்சியால் எதிர்க்க முடியாததால் கூட்டணி கட்சியை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துள்ளது திமுக அரசு. திமுகவின் பொதுக்கூட்ட உரைகளை சட்டமன்றத்தில் ஆளுநர் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா ? என கேள்வி கணைகளை அண்ணாமலை எழுப்பியுள்ளார்.