தமிழ்நாடு

காவிரி டெல்டா பகுதிகளின் தொடரும் சோகம்... கச்சா எண்ணெய் வெளியேறி விளைநிலங்கள் பாதிப்பு... 

கோட்டூர் அருகே ஓஎன்ஜிசி குழாய் உடைந்து கச்சா எண்ணெய் வெளியேறியதால் நேரடி நெல் விதைப்பு செய்துள்ள பல ஏக்கர் விளைநிலங்கள் கடும் பாதிப்பு ஆளாகியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV
காவிரி டெல்டா பாசன மாவட்டங்களின் கடைமடை மாவட்டமான திருவாரூர் மாவட்டம் முற்றிலும் விவசாயத்தை நம்பியுள்ள மாவட்டம்.  இம்மாவட்டத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதை அடுத்து குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏற்கனவே கர்நாடக அரசின் பிடிவாதபோக்கால் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்கப்பெறாமல் விவசாயிகள் மிகுந்த கஷ்டப்பட்டு விவசாய பணிகளை மேற்கொண்டுவரும் நிலையில், மற்றொருபுறம் மத்தியில் ஆளும் பாஜக அரசு டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசி மூலம் விளைநிலங்களில் கச்சா எண்ணெய், மீத்தேன் உள்ளிட்டவைகளை எடுக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 
ஒ.என்.சி.ஜி. குழாய் அமைத்து  குழாய் வழியாக ஆதிச்சபுரம், மேலகண்டமங்கலம், நடுவ களப்பால் ஊர்களில் இருந்து இணைப்பா நெல்லூர் கிராமத்திற்கு கச்சா எண்ணெய் செல்கிறது  கச்சா எண்ணெய் எடுக்கும் வகையில் குழாய் அமைக்கப்பட்டு கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று இக்குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் பீறிட்டு வெளியேறியது.  இதில் சிவக்குமார் என்பவரது விளைநிலத்தில் ஒரு ஏக்கருக்கு மேல் நேரடி விதைப்பு செய்து நெல் முளைத்திருந்த நிலையில் கச்சா எண்ணெய் பரவியதால் அவரது வயல் முற்றிலும் நாசமானது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவக்குமார் கந்துவட்டிக்கு கடன்வாங்கி தனது நிலத்தில் நேரடி விதைப்பு பணிகளை மேற்கொண்டார்.
ஆனால் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் தரமற்ற பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குழாய் உடைந்த நிலையில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.  மேலும் இந்த கச்சா எண்ணெய் வெளியேறியதால் இந்நிலத்தையொட்டி உள்ள விளைநிலங்களும் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் எழுந்துள்ளது.  மேலும் இந்த கச்சா எண்ணெய் வெளியேற்றினாலும் இந்த விளைநிலத்தை மேலும் ஒருசில ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.  இதனால் ஒஎன்ஜிசி நிறுவனம் பாதிப்பு அடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த காலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுடன் கூட்டணிவைத்துக்கொண்டு டெல்டா மாவட்ட விவசாயிகளை ஏமாற்றும் வகையில் பெயரளவிற்கு காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அதனை அரசிதழில் வெளியிட்டு இப்பகுதி விவசாயிகளை ஏமாற்றிவந்தார்.  தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் காவிரி டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு கச்சாஎண்ணெய், எரிவாயு எடுக்கும் பணிகளை கைவிடுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.