தமிழ்நாடு

செந்தில் பாலாஜி கைது விவகாரம்: அமலாக்கத் துறைக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..!

Malaimurasu Seithigal TV

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட போது மனித உரிமை மீறப்பட்டதாக கூறப்பட்ட புகார் குறித்து அறிக்கை அளிக்குமாறு அமலாக்கத் துறை இணை இயக்குனருக்கு தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதின்போது மனித உரிமை மீறப்பட்டதாக கூறப்பட்ட புகார் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி அமலாக்கத்துறை இணை இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், உயர்நீதிமன்ற உத்தரவின் படி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜி கைதின்போது மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், சட்ட நடைமுறைகளின் படி அவருக்கு உரிய நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என்றும், கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டி அமலாக்கத் துறைக்கு எதிராக அவரது மனைவி மேகலா தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மாநில மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை இணை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது.