தமிழ்நாடு

"தாய்மொழி எதுவானாலும் அதனோடு தமிழ் மொழியும் கற்றுக் கொடுக்கப்படும்" அமைச்சா் அன்பில் மகேஷ்!

Malaimurasu Seithigal TV

திருப்பூரில், நமது தாய் மொழியை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குழந்தைகளுக்கு வழங்குவதன் மூலம் நீங்களும் எங்களது சகோதரர்கள் தான், எங்கள் குடும்பத்தின் அங்கத்தினர் தான் என பறைசாற்றும் வகையில் "தமிழ் மொழி கற்போம் திட்டம்" செயல்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேசியுள்ளார்.

திருப்பூர், ஆத்துப்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், "தமிழ் மொழி கற்போம் திட்டம்" துவக்க விழா நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு திட்டத்தினை துவக்கி வைத்தார். 

அப்பொழுது பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கி இருப்பதாகவும், குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் 20 லட்சத்திற்கும் மேல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருக்கின்ற நிலையில், அவர்கள் நம் சகோதரர்கள் போல என வெறும் பேச்சளவில் தெரிவிக்கப்படாமல், அவர்களை அரவணைத்து நம் தாய் மொழியை அவர்களுக்கு வழங்குவதற்காக துவங்கப்பட்ட உன்னத திட்டம், "தமிழ் மொழி கற்போம் திட்டம்" என தெரிவித்துள்ளார். 

மேலும், நம்மை தேடி, நம்மை நாடி வருபவர்களுக்கு, அவர்களது தாய் மொழியோடு, நம் தாய் மொழியையும் கொடுப்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், இதற்காக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 71.9 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், அவர்கள் தாய்மொழி எதுவானாலும் அதனோடு தமிழ் மொழியும் கற்றுக் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் சென்னைக்கு அடுத்தபடியாக கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய மாநகராட்சியாக திருப்பூர் மாநகராட்சி இருப்பதாகவும், அதற்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் பேசினார். பல்வேறு மண்டல தலைவர்கள் , மாநகராட்சி கவுன்சிலர்கள் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருப்பதன் மூலம் மக்கள் அரசு பள்ளிகளை நம்பி வருவதை உணர முடிவதாகவும், விரைவில் அனைவரின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.