தமிழ்நாடு

உள்ளாட்சி பிரதிநிகளுக்கு மதிப்பூதியம் வழங்கும் திட்டம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு.

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டில்  இருக்கக்கூடிய உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகளாக பணியாற்றக்கூடிய உள்ளாட்சி மன்ற தலைவர்கள், மற்றும் உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முழுநேர மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளதால் மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், உள்ளாட்சி மன்ற தலைவர்கள், மற்றும் உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக முதன்மை செயலாளர் தரப்பிலிருந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இருக்கக்கூடிய உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்களோடு தொடர்பிலிருந்து கொண்டு செயல்பட்டு அவர்களது அத்தியாவசிய தேவைகளை கேட்டறிந்து அதற்கேற்ற திட்டங்களை செயல்படுத்தக்கூடிய பொறுப்பிலிருக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள், தாங்கள் முழுநேர மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளதால் மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என முதல்வரிடம் கடந்த ஆண்டு கோரிக்கை வைத்திருந்தனர். அப்போது இந்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்து குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இவ்வாறிருக்க, தற்போது மதிப்பூதியம் வழங்கும் இந்த உத்தரவினை பிறப்பித்திருக்கிறார். 

அதன்படி,  மேயர், துணைமேயர், நகர்மன்ற தலைவர், பேரூராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், மன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்பட இருக்கிறது. 

மாநகராட்சி மேயருக்கு மாதந்தோறும் ரூ.30,000 /- , துணை மேயர்களுக்கு ரூ.15,000 /- மதிப்பூதியம் வழங்கப்படும். மற்றும், மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 /- மதிப்பூதியம் வழங்கப்படும். 

இதேபோல, நகராட்சி மன்ற தலைவர்களுக்கு ரூ.15,000 /-  மற்றும்,  நகராட்சி மன்ற  துணை தலைவர்களுக்கு  ரூ.10,000 /-  வழங்கப்படும் எனவும், மேலும், நகராட்சி மன்ற  உறுப்பினர்களுக்கு ரூ.5,000 /- மாதாந்திர  மதிப்புவுதியமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதனையடுத்து, பேரூராட்சி தலைவர்களுக்கு ரூ.10,000/-    மற்றும்,  பேரூராட்சி துணை தலைவர்களுக்கு  ரூ. 5,000 /-  , மேலும், பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு  ரூ. 2,500 /-  மதிப்பூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இந்த மதிப்பூதிய தொகைகள் இந்த மாதம் முதலே வழங்கப்படும் எனவும், குறிப்பாக இந்த மதிப்பூதிய தொகைகள் வழங்கும் நடவடிக்கையானது, நகராட்சி மற்றும் உள்ளாட்சிகளின்  நிர்வாகத் திறனை  வலுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளில் ஒரு முக்கியமான மைல் கல்லாக இருக்கும் எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இடதுவரையிலும், இந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு மதிப்பூதிய தொகை வழங்கப்படாமல், வார்டு மேம்பாட்டுக்கான நிதி மட்டுமே வழங்கப்பட்டதும் அவற்றையும் பொதுமக்களின் திட்டங்களுக்கு பயன்படுத்த கூடிய அதிகாரங்கள்  மட்டுமே வழங்கபப்ட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.