தமிழ்நாடு

தங்களை புறக்கணிப்பதாக, அமைச்சர் மீது அட்டவணைப் பிரிவினர் புகார்!!

Malaimurasu Seithigal TV

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் அமைச்சர் ஐ பெரியசாமி தங்களைப் புறக்கணிப்பதாக பேரூராட்சி மன்ற தலைவரிடம் அட்டவணைப் பிரிவினர் புகார் அளித்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  சின்னாளப்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள 4வது வார்டு பகுதியில் பட்டியலின மக்கள் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 

அப்பகுதியில் முறையான கழிப்பிட வசதி, சாலைவசதி, தெருவிளக்கு வசதி, குடிதண்ணீர் வசதி இல்லை எனவும், சின்னாளபட்டி பிரிவு செல்லும் பகுதியில், பட்டியலின மக்கள் அடக்கம் செய்யும் மயானத்தில் பேரூராட்சி குப்பை கழிவுகளை கொட்டுவதாகவும், இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர்கள் வசிக்கும் அருந்ததியர் காலணிப்பகுதி தாழ்வான பகுதியாக இருப்பதால், மழை நீர் மற்றும் சாக்கடை கழிவுநீரும் தங்கள் பகுதிக்குள் வருவதாக கூறி, தங்கள் காலனி பகுதியில் பவர்பிளாக் கற்கள் சாலை, வடிகால் வசதி, கழிப்பறை வசதி உட்பட அடிப்படை வசதிகளை செய்துதரகூறி அப்பகுதி மக்கள் ஊர்வலமாக வந்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

பின்னர், செயல் அலுவலர் செல்வராஜ் அறைக்கு சென்ற மக்கள், "சின்னாளபட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில், பத்துக்கும் மேற்பட்ட வார்டுகளை நமது ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் நேரடியாக சென்று பொதுமக்களிடம் தங்களது குறைகளை கேட்டு வருகிறார். ஆனால் இதுவரையிலும் நாங்கள் குடியிருக்க கூடிய அருந்ததியர் இன மக்களின் பகுதிக்கு வரவே இல்லை. ஓட்டு கேட்க வரும் போது மட்டும், எங்களை பார்க்க வருகிறார். மற்ற நேரங்களில் வருவதில்லை" என செயல் அலுவலர் செல்வராஜ் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் பிரதீபா ஆகிய இருவரிடம் தெரிவித்து புகார் மனுவை கொடுத்தனர். 

மனுவை பெற்றுக்கொண்ட செயல்அலுவலர் ஓரிரு நாளில் அப்பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்டு நலத்திட்ட உதவிகள் செய்வதாக சொல்லியதை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சின்னாளபட்டி பேரூராட்சிமன்ற அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.