தமிழ்நாடு

கழிவு மாம்பழங்களில் இருந்து 5,000 மாங்கன்றுகள்...விவசாயிகளாக மாறிய தூய்மைப் பணியாளர்கள்!!

Malaimurasu Seithigal TV

இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் அதிகரித்திருந்த நிலையில், விற்பனையும் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து, கடைகள் மற்றும் வீடுகளில் கெட்டுப் போன மாம்பழங்கள் மற்றும்  மாங்கொட்டைகள் அதிக அளவில் குப்பையில் கொட்டப்பட்டன.  

அப்படி, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பேரூராட்சி, திடக்கழிவு மேலாண்மையில், நாள்தோறும் ஏராளமான மாம்பழக் கழிவுகள் வந்து சேர்ந்தன. இப்படி நாள்தோறும் சேகரிக்கப்படும் கழிவு மாம்பழங்களில் இருந்து, மாங்கன்றுகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது வத்தலகுண்டு பேரூராட்சி நிர்வாகத்திற்கு. 

இந்த எண்ணத்திற்கு தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு செயல் வடிவம் கொடுத்திருக்கிறது வத்தலகுண்டு பேரூராட்சி நிர்வாகம். தூய்மை பணியாளர்கள் மூலம் நாள்தோறும் சேகரிக்கப்படும் கழிவு மாம்பழங்கள் பேரூராட்சியின் பசுமை பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டு, மாம்பழ விதைகள் தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது. பின்னர் வெயிலில் உலர வைக்கப்பட்டு,  பசுமைப் பூங்காவில் உள்ள காலியிடங்களில் நடவு செய்கின்றனர் பேரூராட்சி பணியாளர்கள். 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடங்கள் விதம் பாத்தி கட்டி மாம்பழ விதைகள் நடவு செய்யப்படுகின்றன. 
செடிகளாக வளர்ந்த பின்னர், மாங்கன்றுகளை விதைகளோடு பெயர்த்து எடுத்து, விதைப்பைகளில் வைத்து மாங்கன்றுகளை விற்பனைக்கு தயார் செய்கின்றனர்.

இப்படி குப்பைக் கழிவுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பல வகையான மா விதைகளில் இருந்து சுமார் 5 ஆயிரம் மாங்கன்றுகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் வத்தலகுண்டு பேரூராட்சி நிர்வாகத்தினர்.

இது குறித்து பேரூராட்சி மன்ற தலைவர் பேசுகையில், பேரூராட்சியின் பசுமைப் பூங்காவில், வெற்றிலை, எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு வகையான செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், தற்போது, மாங்கன்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர், என தெரிவித்துள்ளார்.

தூக்கி வீசப்படும் மாம்பழம் விதை தானே என்ற எண்ணாமல், அதனை பயனுள்ள மரக்கன்றுகளாக  உருவாக்கி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ள வத்தலக்குண்டு பேரூராட்சி  நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.