தமிழ்நாடு

தொடர் கனமழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு...உப்பு உற்பத்தியாளர்கள் கவலை!

Tamil Selvi Selvakumar

வேதாரண்யத்தில் கனமழை காரணமாக உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த  அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் சுமார் ஒன்பதாயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.

கடந்த 2 வாரமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று காலை முதல் பெய்து வரும் தொடர் கனமழையால்  உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், தண்ணீரில் உப்புகள் கரைந்து வீணாகியுள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

இதனிடையே சேமித்து வைத்துள்ள உப்பை தார்பாய் கொண்டு பத்திரமாக மூடி வைத்திருக்கும் நிலையில், மீண்டும் உப்பு உற்பத்தி துவங்குவதற்கு ஒரு வார காலமாகும் என்பதால், ஆயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளர்கள் வேலை இழந்திருப்பதாக உப்பு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்தனர்.