கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில் கன்னியாகுமரி கடற்பகுதிகளில் ‘சாகர் கவாச்’ ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடங்கியது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் கடற்பகுதியில் ‘சாகர் கவாச்’ என்ற பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. இதில் கடற்படை, கடலோர காவல்படை, மறைன் போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படை, கியூ பிரிவு, மத்திய-மாநில உளவுத்துறை போலீசார் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு துறையினரும் ஈடுபடுகின்றனர்.
அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 68 கிலோமீட்டர் தூரத்திற்கு கடற்கரை கிராமங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் நவீன படகுகள் மூலம் கடலோர காவல் படையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம், அடையாளம் தெரியாத படகுகள் வந்தால் உடனடியாக தகவல் தரவேண்டும் என்றும் காவல்படையினர் அறிவுறுத்தினர்.
மேலும், கடலோரக் காவல் படையினரே தீவிரவாதிகள் போல் வேடமணிந்தும், அவர்களை சக கடலோரக் காவல்படை வீரர்கள் கண்டுபிடிக்கும் வகையிலும் ஒத்திகைகள் நடைபெற்று வருகின்றன. இன்று தொடங்கிய இந்த பயிற்சி ஒத்திகை நாளை மறுநாள் வரை நடைபெறுகிறது என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: சளிக்கு சிகிச்சை பெற வந்த சிறுமி.. நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர்கள்!!