தமிழ்நாடு

"சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டும்" ஆளுநர் ஆர்.என்.ரவி!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டில் பிறந்து சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களின் வரலாற்றை இங்கு ஆட்சி செய்தவர்கள் திட்டமிட்டே மறைத்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டினார்.

திருச்சி மாவட்டம்  ராம்ஜி நகரில் தனியார் பயிற்சி மையம் சார்பில் நடைபெற்ற மருது சகோதரர்கள் நினைவு நாள் விழாவில் ஆர்.என்.ரவி கலந்துக்கொண்டார். அப்போது, விழாவில் பேசிய அவர், "மருது சகோதரர்கள் சுதந்திரத்திற்காக அவர்கள் வாழ்வையே அர்ப்பணித்தார்கள். சுதந்திரத்திற்கான முதல் பிரகடனத்தை வெளியிட்டார்கள். அதை ஸ்ரீரங்கம் கோவிலில் ஒட்டினார்கள். நாட்டில் விடுதலைக்காக பாடுபட்டவர்கள் அவர்களது தியாகங்கள் அடுத்த தலைமுறைக்கு நினைவுபடுத்தக்கூடிய பணியில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகிறார்கள்.அது மகிழ்ச்சி அளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "இரண்டாண்டுகளுக்கு முன் நான் தமிழ்நாட்டிற்கு வந்த போது தமிழ்நாடு அரசிடம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் பெயர் பட்டியலை கேட்டிருந்தேன். அவர்கள் 40 க்கும் குறைவான பெயர்களை மட்டும் தான் எனக்கு தந்தார்கள்.  பின்னர் தேடி படித்ததில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் தமிழ்நாட்டில் பிறந்து நாட்டின் விடுதலைக்காக போராடி இருப்பது தெரிய வந்தது" எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், வருங்கால தலைமுறையினர், சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.