தமிழ்நாடு

இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்ய சிறப்புத் தீர்மானம்...வெளிநடப்பு செய்த அதிமுகவினர்!

Malaimurasu Seithigal TV

20 ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறை வாசிகளை விடுதலை செய்யக் கோரிய சிறப்பு தீர்மானத்தின் மீது விவாதம் எழுந்த நிலையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கைதிகளின் வயது மூப்பு, உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு பரிசீலிக்க வேண்டும் என்றார்.  

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வது தொடர்பான பரிந்துரை ஆளுநர் வசம் உள்ளதாக குறிப்பிட்டார். ஆளுநர் ஒப்புதல் அளித்தபின் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், இஸ்லாமிய கைதிகள் யாருமே விடுதலை செய்யப்படவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தப் பார்ப்பது போலியானது என்றும் அவர் குறிப்பிட்டார். 

10 ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் இருந்தபோது கண்களை மூடிக்கொண்டு இருந்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தருமபுரியில் பேருந்தை எரித்தவர்களை முன்விடுதலை செய்த அதிமுக, இஸ்லாமிய சிறைவாசிகளை ஏன் விடுதலை செய்யவில்லை? ஏன் இந்த திடீர் பாசம் என்றும் கேள்வி எழுப்பினார். 

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச முயன்றபோது, உறுப்பினர்கள் கூச்சலிட்டதால் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.