தமிழ்நாடு

சீனாவில் உயிரிழந்த தமிழ்நாட்டு மாணவன்...மத்திய, மாநில அரசுக்கு பெற்றோர் கோரிக்கை...!

Tamil Selvi Selvakumar

புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவர் சீனாவில் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

சீனாவில் மருத்துவ படிப்பு:

புதுக்கோட்டையை சேர்ந்த சையது அபுல்ஹாசன் என்பவரது மகன் ஷேக் அப்துல்லா, கடந்த 5 ஆண்டுகளாக சீனாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில்  மருத்துவம் படித்து வந்தார். முதல் வருடம் பல்கலைக்கழகம் சென்ற அவர், அடுத்த மூன்று ஆண்டுகளும் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாகவே கல்வியைக் கற்று முடித்தார். இதையடுத்து தற்போது, மருத்துவ பயிற்சிக்காக கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி சீனாவுக்கு சென்றுள்ளார்.

உடல்நிலை பாதிப்பு:

பின்னர் அந்நாட்டின் விதிமுறையின்படி, 8 நாட்கள் தனிமையில் இருந்த ஷேக் அப்துல்லா,  அதன்பின் பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஷேக் அப்துல்லாவிற்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் அப்துல்லாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை கேட்டு அதிர்ச்சியைடந்த பெற்றோர் தன் மகனை எப்படியாவது உயிருடன் ஊருக்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடமும், மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த மாணவன்:

ஆனால், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அப்துல்லா  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையறிந்து அதிர்ச்சியில் உறைந்த மாணவரின் குடும்பத்தினர், மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. 

உறவினர்கள் கோரிக்கை:

இந்நிலையில் சீனாவில் இறந்த ஷேக் அப்துல்லாவின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து வரும் விவகாரத்தில் உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மத்திய மாநில அரசுகள் உரிய நிவாரண தொகையை வழங்கவும் மாணவனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.