தமிழ்நாடு

"கடலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு அஞ்சலையம்மாள் பெயர்" அன்புமணி கோரிக்கை!

Malaimurasu Seithigal TV

கடலூர் ஆட்சியர் வளாகத்திற்கு தென்னாட்டு ஜான்சிரானி என போற்றப்படும் அஞ்சலையம்மாளின் பெயரைச் சூட்ட வேண்டும் என அண்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.  

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்திற்கு சொந்தக்காரர் அஞ்சலையம்மாள்.  1927 ஆம் ஆண்டு மதராஸ் மவுண்ட் சாலையில் ஆங்கிலேய அரசால் அமைக்கப்பட்ட நீலன் சிலையை அகற்றக்கோரி அவர் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. வயிற்றில் மகவைச் சுமந்த நிலையில் போராடி சிறை சென்ற அஞ்சலையம்மாள், விடுப்பில் வெளிவந்து மகப்பேற்றை முடித்துக் கொண்டு மீண்டும் போராட்டம் நடத்தி கைக்குழந்தையுடன் சிறைக்கு சென்றவர். அவரது துணிச்சலைக் கண்டு காந்தியடிகளே வியந்தார். அவருக்கு தென்னாட்டு ஜான்சி ராணி என்று பட்டம் வழங்கினார்.

இந்நிலையில், கடலூர் அஞ்சலையம்மாளின் 133-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.  அப்பதிவில் தென்னாட்டு ஜான்சிராணியான அஞ்சலையம்மாளின் 133-ஆம் பிறந்தநாளில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் என தெரிவித்துள்ளார். மேலும், அஞ்சலையம்மாளின் தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு அஞ்சலையம்மாளின் பெயரைச் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.