ஈகை பெருநாளான ரமலான் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வில் என்றென்றும் இன்பமும், நலமும் நிறைந்து இனிமை பெருகட்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுகவும், திராவிட மாடல் அரசும் நபிகள் பெருமானார் காட்டிய சமத்துவ சமுதாயம் அமைக்கும் பணியில் சமரசமின்றித் தனது பயணத்தை தொடர்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம் என்று நபிகள் நாயகம் உலகிற்கு பறைசாற்றி உள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளைச் செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும் என்று ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இறைத்தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மனதில் நிலைநிறுத்தி, மனித சமுதாயத்தில் அன்பு, வாய்மை, நேர்மை, மனிதநேயம், சகோதரத்துவம் பெரிதும் வளர்ந்தோங்கிட இனிய ரமலான் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
ஈகைத் திருநாளில் தக்பீர் முழக்கம் கூறி, தொழுது, அதற்கு முன்னர் ஏழைகளுக்கு 'சதக்கத்துல் பித்ர்' என்னும் பெருநாள் கொடை வழங்கி, அனைவருடனும் உணவருந்தி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இறை நம்பிக்கையுடன் நபிகள் நாயகத்தின் தியாகம், நன்மை, ஒழுக்கநெறி உள்ளிட்ட நற்செயல்களை அனைவரும் கடைபிடித்து நல்வழியில் பயணிப்போம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : தடுப்பணை கட்டும் கேரள அரசு...! தூங்கிக் கொண்டிருக்கும் விடியல் அரசு...!! த.பெ.தி.க கண்டனம்...!!!
ரமலான் குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலகில் அமைதி, வளம், மகிழ்ச்சி, கல்வி, வளர்ச்சி, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகுவதற்காக பாடுபடுவதற்கு இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்று ஈகைத் திருநாளை பெருமகிழ்வுடன் கொண்டாடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளுள் ஒன்றான ரமலான் நோன்பினை மெய்வருத்தி கடைபிடித்து, "இல்லாரும், இருப்போரும் ஒன்றே" என்ற தத்துவத்தை வெளிப்படுத்தும், இஸ்லாமிய சொந்தங்களுக்கு ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.