தமிழ்நாடு

இடைக்கால நிவாரணமாக ரூ.2,000 கோடி வழங்க வேண்டும் - முதலமைச்சர் கோரிக்கை!

Malaimurasu Seithigal TV

புயல் பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம், இடைக்கால நிவாரணமாக இரண்டாயிரம் கோடி ரூபாய் வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

மிக்ஜாம் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் வகையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து,  ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு சேதங்களை ஆய்வு செய்தார். அவருடன், அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

இதனைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகம் வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். தொடர்ந்து, மிக்ஜாம் புயல் பாதிப்புகள் குறித்தும், மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முதலமைச்சரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

பின்னர் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முழு நிவாரணத் தொகையை பெற்று தருவதாக ராஜ்நாத் சிங் உறுதியளித்திருப்பதாக கூறினார். 

தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்புகளை கண்டு பிரதமர் மோடி மிகுந்த கவலை அடைந்ததாக கூறிய ராஜ்நாத் சிங், பாதிப்பில் இருந்து மீள, தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் உறுதி அளித்தார்.