தமிழ்நாடு

50வது ஆண்டு இராஜாஜி நினைவு தினம்: அமைச்சர்கள் மரியாதை...!

Tamil Selvi Selvakumar

சுதந்திர போராட்ட வீரரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான மூதறிஞர் இராஜாஜியின் 50-வது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் மேயர் ப்ரியா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சுதந்திர போராட்ட வீரர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு அருகிலுள்ள தொரப்பள்ளி கிராமத்தில் 10.12.1878 அன்று பிறந்தவர் மூதறிஞர் ராஜாஜி. சுதந்திர போராட்ட வீரரான இவர், உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கு பெற்றார். 

மிக உயரிய பதவிகள்:

இதைத்தொடர்ந்து, 1937 ஆம் ஆண்டு அன்றைய மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். அதைத்தொடர்ந்து, மேற்கு வங்க ஆளுநர், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் என நாட்டின் மிக உயர்ந்த பதவிகளை வகித்தவர். இவருடைய 50 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரின் பெருமைகளை அடுத்த தலைமுறையினரும் அறிந்து பயன்படுகின்ற வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. 

தமிழக அரசு சார்பில் மரியாதை:

இந்நிலையில் மூதறிஞர் இராஜாஜியின் 50 வது நினைவு நாளான இன்று, தமிழக அரசின் சார்பில் சென்னை பாரிமுனை ஐகோர்ட் வளாகம் அருகில் அமைந்துள்ள அவரின் திருவுருவச்சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் தாமோ அன்பரசன் மற்றும் மேயர் ப்ரியா ராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

புகைப்பட கண்காட்சி:

இதன் தொடர்ச்சியாக, அவரது வாழ்க்கை வரலாற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதல் அறிஞர் ராஜாஜியின் புகைப்பட கண்காட்சியும் செய்தி தொடர்பு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது