சாதி வெறியர்களை கைது
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலைத் தொட்டி குடிநீரில் மனித மலம் கொட்டிய சாதி வெறியர்களை கைது செய்ய வலியுறுத்தி விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு சட்டம்
பொது மயானம் வேண்டும் என்றும் ஆவண கொலைகளை தடுக்க அரசு சட்டம் இயற்ற வேண்டும், தமிழகத்தில் தலைவிரித்து ஆடும் சாதிய கொடுமையை தவிர்க்க உளவுப்பிரிவு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கண்டன முழக்கங்களையும் எழுப்பினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன்,
புதுக்கோட்டை வேங்கைவயலில் நடைபெற்ற சம்பவம் தேசத்திற்கே அவமானமான செயல். சிறப்பு புலனாய்வு குழுவிற்கு பதிலாக இந்த வழக்கை சிபிசிஐடி மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுவதை வரவேற்கிறோம்.ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்றார்.
மேலும் படிக்க | நீட் விலக்கு மசோதா- தமிழக அரசின் பதில்களில் ஆயுஷ் அமைச்சகம் கேள்வி? - மா.சு விளக்கம்
கழிவு கலக்கப்பட்ட தொட்டியயை இடிக்க வேண்டும். அந்த மக்களுக்கு என தனி தொட்டி அமைக்ககூடாது.இரட்டை குவளை போல், இரட்டை தண்ணீர் தொட்டி, இரட்டை சுடுகாடு போன்றவை கூடாது என கோரிக்கை வைத்தார்.
இரட்டை குவளை முறை தமிழ்நாடு முழுவதிலும் உள்ளது. தமிழ்நாடு இந்திய அளவில் ஜாதி தீண்டாமை உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல் 10 இடங்களில் 4ஆம் இடத்தில் உள்ளது என்றும் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள இரட்டை குவளை முறையினை ஒழிக்க வேண்டும் என்றார்.
மேலும் படிக்க | ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியே நிற்கும் - கே.எஸ். அழகிரி
மேலும் மத்திய மாநில பட்டியலின ஆணையம் உள்ளது. இவை இதுவரை புதுகோட்டை பகுதிக்கு செல்லவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. முதல்வரோ, காவல்துறையோ சொன்னால் தான் அந்த பகுதிக்கு போக வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. களத்தில் மக்களுக்காக உடனடியாக பணியாற்றி இருக்க வேண்டும் என்றார்.
யார் பாதிக்கப்பட்டார்கள் என்பது பிரச்சனை அல்ல, மனித குலத்திற்கே அவமானமான பிரச்சனை இது.
இதில் மற்ற அரசியல் கட்சிகள் கண்டனத்தை வெளிப்படுத்தாது வருத்தத்தை அளிக்கிறது என்றார்.