தமிழ்நாடு

டிசம்பர் மாதத்திற்குள் போரூர் மேம்பாலம் மக்களின் பயன்பாட்டிற்காக.... அமைச்சர் எ.வ.வேலு!!!

Malaimurasu Seithigal TV

பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் சாலை, பாலம் என அனைத்து பணிகளுக்கும் 90% நில எடுப்பு பணி முடிந்ததன் பின்பே டெண்டர் விட வேண்டும் என அரசு முடிவு செய்து செயல்படுத்தி வருவதால், வருங்காலங்களில் எந்த பணிகளும் காலதாமதம் ஏற்படாது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்தார். 

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, போளூரில் ரயில்வே மேம்பால பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கூறினார். 

இதற்கு பதிலளித்த பொதுபணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கடந்த காலங்களில் நிலை எடுப்பு பணி முடிவதற்கு முன்பாகவே டெண்டர் விட்டதால் தான் பல இடங்களில் பணிகள் முடிய கால தாமதமானதாக தெரிவித்தார்.

மேலும், பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளக்கூடிய சாலை, பாலம் என அனைத்து பணிகளுக்கும் 90% நிலஎடுப்பு பணிகள் முடிந்த பின்பாகவே டெண்டர் விட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர், அதன்படி 90% பணிகள் முடிந்த பின்பாகவே டெண்டர் அறிவிக்கிறோம் என்றும், இதனால் வரும் காலங்களில் பொதுப்பணித்துறை சார்பில் அறிவிக்கப்படக்கூடிய பணிகளில் கால தாமதம் ஏற்படாது எனவும் குறிப்பிட்டார். 

போளூர் ரயில்வே மேம்பாலத்தை பொறுத்தவரை 30 சதவீதம் கூட நில எடுப்பு பணிகள் முடியாமல், கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் விட்டதன் விளைவாகவே பணிகள் தாமதமானதாக கூறிய அவர், அந்த பாலம் ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் வருவதால், தொடர்ந்து கடிதம் எழுதி இதுவரை 75 சதவீதம் மட்டுமே பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், தற்போது இந்த மாத இறுதியில் டெண்டர் விடுவதாக ரயில்வே துறை ஒப்புதல் கொடுத்துள்ளது என்றும், அதன்படி டெண்டர் விடப்பட்டதும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் போரூர் மேம்பாலம் மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.