தமிழ்நாடு

"கல்வி, விளையாட்டு, சுகாதாரம் - முதல்வரின் முக்கியமான கோட்பாடாக அமைந்துள்ளது", அமைச்சர் பொன்முடி!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டில் கல்வி, விளையாட்டு, சுகாதாரம் ஆகியவை முதல்வரின் முக்கியமான கோட்பாடாக அமைந்துள்ளதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், சென்னை இராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மற்றும் சென்னை மேற்கு மாவட்ட திமுக இணைந்து நடத்திய இந்த கால்பந்தாட்ட போட்டியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்

அதன் அடிப்படையில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வேளாண்த்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு ஆகியோர் கலந்து கொண்டு இறுதி போட்டியில் வெற்றி பெற்ற கால்பந்தாட்ட வீரர்களுக்கு கோப்பைகளையும், பரிசு தொகையையும் வழங்கினர். 

இதனை தொடர்ந்து பேசிய உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விளையாட்டு துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும் என்று முதல்வர் செயல்பட்டு வருவதாகவும் கல்வி, விளையாட்டு, சுகாதாரம் ஆகியவை முதல்வரின் முக்கியமான கோட்பாடாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் படிப்பையும் தாண்டி அனைத்து திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருவதாகவும், இளைஞர்களை விளையாட்டில் சிறந்தவர்களாக உருவாக்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதற்கான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்பட்டு வருவதாகவும் பெருமிதத்துடன் பேசியுள்ளார்.