தமிழ்நாடு

கர்நாடக துணை முதல்வரின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு...

மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவை விட அதிகம் பயன்பெறப்போவது தமிழ்நாடு தான் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியதற்கு அன்புமணி, பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெர்வித்துள்ளனர்.

Jeeva Bharathi

சென்னை ஆலந்தூரில் திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகள் குறித்து கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது போதியளவு மழை பெய்துள்ளதால் காவிரி நீர் குறித்து பேச தேவையில்லை என்றார்.மேலும் காவிரியின் குறுக்கே அணை கட்டினால் தமிழ்நாடு தான் அதிகம் பலன் பெறும் என்றார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி, கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்டினால் அதனை நிர்வகிக்கும் பொறுப்பை தமிழகத்திற்கு கொடுக்குமா என கேள்வி எழுப்பினார். மேலும் இராசிமணல் அணை கட்டும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் அன்பு மணி வலியுறுத்தினார்.

மேகதாதுவில் அணை கட்டுவதன் மூலம் தமிழகத்தை பாலைவனமாக்க கர்நாடக அரசு திட்டமிடுகிறது எனவும் அதற்கு துணை போகின்ற வகையில் கர்நாடகா துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் பேசுவது கண்டிக்கத்தக்கது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.