தமிழ்நாடு

இன்று காணும் பொங்கல்...மெரினாவில் குவியும் மக்கள்...2 LED திரை அமைத்த போலீசார்!

Tamil Selvi Selvakumar

காணும் பொங்கலின்போது, பொது மக்களின் பாதுகாப்பை கண்காணிப்பதற்காக மெரினா கடற்கரையில் புதிதாக 2 LED திரை அமைக்கப்பட உள்ளன.

காணும் பொங்கல் முன்னெச்சரிக்கை :

பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு கடைசி நாளான இன்று அதிக அளவில் பொதுமக்கள் மெரினா கடற்கரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் இன்று பொதுமக்கள் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் மக்கள் இறங்கி கால் நனைக்கும் பகுதியில் மரக்  கட்டைகளை கட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.  

எல்இடி திரைகள் :

மெரினாவில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை கருத்தில் கொண்டு பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மேலும் மெரினா கடற்கரை முழுவதும் டிரோன் மூலம் கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக 15 ஆயிரம் போலீசாருடன் ஆயிரம் ஊர் காவல் படையினரும் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். அதேசமயம்  மெரினா கடற்கரை பேருந்து நிலையம் முதல் கலங்கரை விளக்கம் வரையில் 5 இடங்களில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அவற்றை ஒட்டுமொத்தமாக கண்காணிக்கும் வகையில் இரண்டு பெரிய அளவிலான எல்இடி திரைகளும் வைக்கப்பட உள்ளது. 

அசம்பாவிதங்களை தடுக்க நடவடிக்கை :

மக்கள் கூட்டம் அதிகம் வருவதை கருத்தில் கொண்டு கடலில் இறங்கி குளிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக இரண்டு ரப்பர் படகுகள், லைவ் ஜாக்கெட், ஸ்கூபா செட்  மோட்டார் பொருத்திய படகுகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.