தமிழ்நாடு

'வேகமாக செல்லும் வாகனங்களுக்கு அபராத திட்டம்' காவல்துறை விளக்கம்!

Malaimurasu Seithigal TV

சென்னையில் வாகனங்களின் வேகத்தை கணக்கிடும்  ‘ஸ்பீடு ரேடார் கன்’ கருவி, சோதனை அடிப்படையிலேயே பொருத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

சென்னையில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகத்தில் பயணிக்கும் வாகனங்களை கண்காணித்து அபராதம் விதிக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த அறிவிப்பின்படி, சென்னையில் பகலில் 40கி.மீ வேகத்தையும், இரவில் 50கி.மீ வேகத்தையும் கடந்து வாகனம் ஓட்டினால் அதிவேக பயணம் என வழக்கு பதிவு செய்யப்படும் என கூறப்பட்டது. இதில் 'ஸ்பீடு ரேடார் கன்' தொழில் நுட்ப கருவி மூலம் தானியங்கி முறையில் வழக்குப் பதிவாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டது. அதே சமயத்தில் இந்த முறையில் அபராதம் விதிப்பதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பகலில் 40 கிமீ வேகத்தில் சென்றால் தாங்கள் செல்லும் வேலைக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாது எனவும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்திற்கும் 40 கிமீ வேகம் என்பது மிகக் குறைவானது எனவும் கண்டனங்கள் எழுந்தன. 

இந்நிலையில், இத்திட்ட அறிவிப்பிலிருந்து சென்னை பெருநகர காவல்துறை பின்வாங்கியுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை  வெளியிட்ட அறிவிப்பில், 'ஸ்பீடு ரேடார் கன்' கருவி சோதனை அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் இதுவரை எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை எனவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.