தமிழ்நாடு

விஷச் சாராயம் விவகாரம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Malaimurasu Seithigal TV

மரக்காணம் பகுதியில் மெத்தனால் கலந்த எரி சாராயத்தை குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரிடம் சிபிசிஐடி போலீசார் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் மீனவர் பகுதியில் உள்ள வம்பா மேடு என்ற இடத்தில் தொடர்ந்து ஒரு சிலர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி இப்பகுதியில் மெத்தனால் கலந்த எரி சாராயத்தை குடித்ததில் எக்கியார்குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபோல் மரக்காணம் சம்புவெளி தெருவை சார்ந்த ஒரு நபர், மரக்காணம் செல்லன் தெருவில் இரண்டு பேர், மரக்காணம் நகரான் தெருவில் ஒரு நபர் உள்பட 14 பேர் உயிரிழந்து விட்டனர். மேலும் சிலர் முண்டியம்பாக்கம் புதுவை ஜிப்மர் மருத்துவமனைகளில் உயிர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். 

இவர்களில் 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். இந்நிலையில் மெத்தனால் கலந்த எரி சாராயத்தை குடித்து உயிரிழந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், மரக்காணம் மாரியம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்த ஆறு பேர், புதுவை மாநிலத்தை சேர்ந்த பிரபல மொத்த கள்ளச்சாராய வியாபாரிகள் இரண்டு பேர் மெத்தனாலை விற்பனை செய்த சென்னையை சேர்ந்த தொழில் அதிபர்கள் இரண்டு பேர் மற்றும் கள்ளச்சாராயத்தை வாகனத்தில் கடத்தி வந்த ஓட்டுநர், புதுவை மாநிலம் வில்லியனூர் அருகிலுள்ள பிரம்பை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட பதினோரு பேரை போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறை சாலையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மரக்காணம் கரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மதன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி போலீஸ் ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான சிபிசிஐடி போலீஸ் குழுவினர் நேற்று மாலை மரக்காணம் காவல் நிலையத்திற்கு வந்து அங்கிருந்த போலீசாரிடம் இச்சம்பவம் குறித்து விசாரித்தினர். இதனை தொடர்ந்து எரி சாராயம் விற்று அதிகபடியான உயிரிழந்த எக்கியார்குப்பம் மீனவ பகுதிக்கு சென்றனர். அங்கு எரி சாராயத்தை குடித்துவிட்டு பலியான மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் பார்வையிட்டு ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.