பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மத்திய அரசை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறுகிறது.
5 ஆண்டுகள் தடை:
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து 5 ஆண்டுகள் செயல்பட தடைவிதித்துள்ள நிலையில், ஆதாரத்தின் அடிப்படையிலேயே அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
8 இயக்கங்கள்:
பிஎப்ஐ என்ற அந்த அமைப்பின் கீழ் 8 இயக்கங்கள் செயல்பட்டதாகவும், இதன் தலைவர்களாக பிஎப்ஐ உறுப்பினர்களே இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர்களாக இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், இமான்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் உள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிகப்படுள்ளது.
மேலும் படிக்க: பிஎஃப்ஐ என்றால் என்ன? அது எப்படி நிறுவப்பட்டது? என்ன ஆபத்தான நோக்கத்துடன் இது செயல்படுகிறது?
கோவையில் போராட்டம்:
பிஎஃப்ஐ தடை செய்ததை எதிர்த்து கோவையின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்பினர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் செய்த நூற்றுக்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைது செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி:
இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில், பிஎஃப் ஐ தடை செய்யப்பட்டதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இஸ்லாமியர்கள்:
இதனிடையே மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் இருக்கும் பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் செயல்பட்டு வந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
நெல்லை:
அதேபோல் நெல்லை மாநகரிலும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு கவசம் அணிந்த அதிரடி படையினர் 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை பத்தமடை, ஏர்வாடி, உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நீடித்து வருகிறது.