தமிழ்நாடு

North Indians பீதியடைய வேண்டாம்...ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாட்டில் வட மாநில இளைஞர்கள் தாக்கப்படுவதாக வெளியான செய்திக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வட மாநில இளைஞர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், நேற்றைய தினம் வடமாநிலத்தவர்கள் படையெடுத்து ரயில் நிலையங்களில் குவிந்ததால், மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இது குறித்து வட மாநிலத்தவர்கள் சிலர் நாங்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்புடன் தான் இருக்கிறோம், எங்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என்று கூறிவந்தனர். 

மேலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த வீடியோ பொய்யானது என்று டிஜிபி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் மறுத்து வந்தனர், தொடர்ந்து, முதலமைச்சரும் இச்செய்திக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள் எனவும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தி உள்ளார்.