தமிழ்நாடு

டாஸ்மாக் கடை மூடல் - பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாட்டம்!

Malaimurasu Seithigal TV

திருச்சியில் இயங்கி வந்த ஒரு டாஸ்மார்க் கடை மூடப்படுவதை முன்னிட்டு அப்பகுதி மக்கள் இனிப்புகள் வழங்கி பட்டாசுகள் வெடித்து கொண்டாடியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட அத்துறை அமைச்சர், தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என தெரிவித்திருந்தார். 

அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 5,329 டாஸ்மாக் மதுபானக் கடைகளில், விதிகளுக்கு அப்பாற்பட்டு அதாவது பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் இருக்கும் கடைகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் நிர்ணயிக்கப்பட்ட தூரத்துக்கு உள்ளே இருக்கும் கடைகள், மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் கடைகளை கணக்கெடுக்கும்படி உத்தரவிடப்பட்டது. 

இதன்படி, 500 கடைகளை இன்று முதல் (22.6.2023) மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இன்று முதல் (22.6.2023) செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், திருச்சி மாவட்டத்தில் 16 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதில் திருச்சி திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் உள்ள அரசு மதுபான கடையானது குடியிருப்பு பகுதியிலும், பள்ளிக்கு மிக மிக அருகில் இருப்பதாலும் இதனை அகற்றக் கூறி அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து போராடி வந்தனர். இந்த நிலையில் அரசு அறிவித்ததில் இந்த கடை மூடப்படுவதால் அப்பகுதி மக்கள் பட்டாசுகள் பிடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடியுள்ளனர்.