தமிழ்நாடு

ஈரோடு: தனியார் மருத்துவமனையில் பெருச்சாளி கடித்து நோயாளி மரணம்...!

Malaimurasu Seithigal TV

ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் பெருச்சாளி கடித்து மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம்  கோணவாய்க்கால் பகுதியை சேர்ந்த சண்முகம் ( 45 ).  இவர் டெய்லராக பணியாற்றினார்.  இவர் கடந்த மாதம் 24ந் தேதி சக்கரை நோய் காரணமாக, ஈரோடு சம்பத் நகரில் உள்ள ’பாவேந்தர் பரணி’ மருத்துவமனையில், சிகிச்சைக்காக  சேர்ந்துள்ளார். 

இதனையடுத்து,  மனைவியிடம்  போலியாக கையெழுத்து வாங்கி இடது கையில் அறுவை சிகிச்சை செய்த காரணத்தால், வலது கால் தொடையில் இருந்த  சதையையும், நரம்பபையும் எடுத்து பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்திருக்கின்றனர்.

இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர், அறுவை சிகிச்சை செய்த இடது கையின் காயத்தில் சீழ் பிடித்துள்ளதாக கூறி சிறிது நாட்கள் சிகிச்சை பெற்று வர வேண்டும் என மருத்துவர் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கையில் ஏற்பட்ட காயத்திற்கும், காலில் ஏற்பட்ட காயத்திற்கும் முறையாக சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த சண்முகத்தின் வலது காலில் பெருச்சாளி கடித்து விரல்களில் ரத்தம் வழிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியை அடைந்தார்.

இதனையடுத்து அவருடன் இருந்தவரை ( ஆட்டன்டரை)  கூச்சலிட்டு வரவழைத்து கதறியுள்ளார், இதனால் திடீரென எதிர்பாராத விதமாக சண்முகத்திற்கு மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வந்த சண்முகம், தீவிர சிகிச்சை பிரிவில் மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், (பல்ஸ்)  நாடித்துடிப்பு குறைந்து இன்று காலை துடிதுடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அங்கு திரண்ட சண்முகத்தின் மனைவி உட்பட உறவினர்கள் சுகாதாரமற்ற முறையில், தவறான சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுத்து, மருத்துவமனையை சீல் வைத்து மூட வேண்டும் எனவும், இந்த தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சைகள் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சண்முகத்தின் குடும்பத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும்,

மேலும், தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது சுகாதாரத் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து உயிரிழந்த சண்முகத்திற்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த முற்றுகை போராட்டத்தையடுத்து, ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சமரச பேச்சு வார்த்தையில், உறவினர்கள் கூறிய கோரிக்கைகள் ஏற்று உரிய நிவாரணம் வழங்கப்படும் என மருத்துவமனை நிர்வாகத்தின் தரப்பில் முடிவானதை தொடர்ந்து, இறந்த சண்முகத்தின் சடலத்தை பெற்று  சென்றனர்.