தமிழ்நாடு

பனிமயமாதா பேராலய திருவிழா... பக்தர்கள் இன்றி தொடங்கியது...

வரலாற்றில் 2-ம் முறையாக பனிமய மாதா பேராலய திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி தொடக்கம் - மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை ஆலய கொடியை ஏற்றி வைத்தார்.

Malaimurasu Seithigal TV
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா  ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை 10 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தத் திருவிழா நாள்களில் உலக நன்மை, உலக சமாதானம், மாணவ மாணவிகள் கல்விமேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத்தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான விசேஷ திருப்பலிகள் மற்றும்  நற்கருணை பவனி நடைபெறும். திருவிழாவின் 10-ம் நாள் விழாவில் நகர வீதிகளில் பனிமய அன்னையின் திருவுருவ தேர்ப்பவனி நடைபெறும். இங்கு கிறிஸ்துவர்களுக்கு அடுத்தபடியாக இந்துக்களும், முஸ்லீம் மக்களும் பிராத்தனைக் கூட்டங்களில் கலந்துகொண்டு, தங்கள் பிராத்தனை நிறைவேற மெழுகுவத்தி ஏந்திஅன்னையை வழிபடுவது  கூடுதல் சிறப்பாகும்.
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவில், உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மாதாவை தரிசிக்க தூத்துக்குடிக்கு பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு, கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பின்றி திருவிழா நடைபெறும் என  மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அறிவித்திருந்தார். எனவே திருவிழா நிகழ்வுகளை உள்ளூர் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஆலய பங்கு சபை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, வரலாற்றில் 2-வது முறையாக பக்தர்கள் பங்கேற்பின்றி பனிமய மாதா ஆலய திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. காலை, கூட்டுத்திருப்பலிக்குப் பிறகு ஆலயத்தின் முன்உள்ள கொடிக்கம்பத்தில் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் பங்கு தந்தை குமார் ராஜா மற்றும் முக்கிய பங்கு நிர்வாகிகள் முன்னிலையில் பனிமய அன்னை திருவிழா  கொடியேற்றப்பட்டது. அப்போது விண்ணுயர பனிமய அன்னை வேண்டி குரல் எழுப்பியும், சமாதான புறாக்களை பறக்கவிட்டும் விழா தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகள் உள்ளூர் தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
திருவிழா ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி நடைபெறுவதால் ஆலயத்தில் சப்பர பவனி, தேர்பவனி நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடைகள் அமைக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. திருவிழாவின் மற்ற நாட்களில் குறிப்பிட்ட அளவு பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து தரிசித்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
திருவிழாவையொட்டி, ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், இரண்டு காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும்  400 காவலர்கள் ஆலயத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதைத்தொடர்ந்து மறை மாவட்ட ஆயர் ஸ்டிபன் ஆண்டனி செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலய பெருவிழா ஆண்டு தோறும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 5 வரை 11 நாள் ஆண்டுப் பெருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த வருடம் 439-வது ஆண்டு பெருவிழா இன்று 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா ஊரடங்கால் அரசு விதிமுறைப்படி பக்தர்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம் நடைபெற்றுள்ளது.
கொரோனா கட்டுபாடுகளால் ஆலயத்தில் திருவிழா திருப்பலி, நற்கருணை ஆசீர், சப்பர  பவனி, கொடி பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாது. பெருவிழா சிறப்பு திருப்பலிகள், ஆராதனைகள் மற்றும் திருவிழா முக்கிய நிகழ்ச்சிகள் ஆன்லைன் மூலமாக தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் அனைவரும் வீடுகளில் இருந்து கண்டுகளிக்க வேண்டும் என்றார். அதேநேரம் ஆலயத்துக்குள் நடைபெறும் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர் உள்ளிட்ட வழிபாடுகள் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறும். அந்நேரங்களில் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி பக்தர்கள் தனித்தனியே ஆலயத்துக்கு வந்து நேர்ச்சைகள் செலுத்தி செல்லலாம். அரசின் கட்டுபாட்டு வழிகாட்டுதல்களை பின்பற்றி முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து அன்னையை வழிபட வேண்டும் என தெரிவித்தார்.