தேனி மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேனியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ வி கே எஸ் இளங்கோவனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓ பி ரவீந்திரநாத் ஏழாயிரத்து 319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், இந்த வெற்றியை எதிர்த்து தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஓ பி ரவீந்திரநாத் வேட்பு மனு தாக்கலில் முறையான சொத்து கணக்கை காட்டவில்லை என்றும், வாக்குப் பெட்டிகளை மாற்றியும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும் வெற்றி பெற்றதால் அதை செல்லாது என்று உத்தரவிட அந்த மனுவில் கோரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ரவீந்திரநாத் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டு நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு மட்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க : நீலகிரி : தொடர் கனமழையால் ஏற்பட்ட மண் சரிவு...பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதி சுந்தர் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். தேனி மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, மேல் முறையீடு செய்ய கால அவகாசம் வழங்குமாறு ரவீந்திர நாத்தின் வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி, மேல் முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.