தமிழ்நாடு

"ஆன்லைனில் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும்", அமைச்சர் முத்துசாமி!!

Malaimurasu Seithigal TV

மதுபானங்களுக்கு ஆன்லைன் முறையில் பணம் செலுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு சாஸ்திரி நகர் பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டுள்ளார். 

அப்பொழுது பேசிய அமைச்சர், "அத்திக்கடவு அவினாசி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. முன்பு, திட்டம் துவங்கும் இடத்தில் இடப் பிரச்சினை இருந்தது. திமுக அரசு அமைந்தவுடன்,  பேசி சரி செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. 1045 குளங்களில், 200 குளங்கள் மட்டுமே பணிகள் பாக்கியுள்ளது. இடையில் தண்ணீர் குறைந்ததால் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது அதுவும் சரி செய்யப்பட்டு மிக விரைவில் அனைத்து பணிகளும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது", என்று கூறியுள்ளார்.

மேலும், "அயல்நாட்டு மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. உள்நாட்டு மதுபானங்கள் விலை உயர்த்தப்படுமா, என்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். அதே போல்,  மதுபானங்களுக்கு ஆன்லைன் முறையில் பணம் செலுத்துவது உட்பட பல்வேறு நடவடிக்கை, இத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து இரண்டு மாத காலத்திற்கு பின்னர் தெரிவிக்கப்படும்" என அறிவித்துள்ளார்.