தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்ட தடை - அரசிதழில் தண்டனை விவரங்கள் வெளியீடு!

Tamil Selvi Selvakumar

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசிதழில் தண்டனை விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.


தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு அன்றைய தினமே ஆளுநர் ஒப்புதல் அளித்தார். 

தொடர்ந்து இன்று முதல் அந்த சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவோருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது 5 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுக்கு விளம்பரம் செய்வோருக்கு ஒரு ஆண்டு சிறை அல்லது 5 லட்ச ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இத்தவறை மீண்டும் செய்தால் 3 ஆண்டுகள் சிறை மற்றும் 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் பணம், வெகுமதிகளுடன் விளையாட்டை ஊக்குவிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறை அல்லது 10 லட்ச ரூபாய் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்தவறை மீண்டும் செய்தால், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் 20 லட்ச ரூபாய் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.