தமிழ்நாடு

ஆம்னி பேருந்துகள் செல்லும் வழித் தடங்கள் அறிவிப்பு...!

Malaimurasu Seithigal TV

சென்னை கோயம்பேட்டில் இருந்து செல்லும் ஆம்னி பேருந்துகள் நாளை முதல் வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாது என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் விதமாக கோயம்பேடு பேருந்து நிலையம் தவிர்த்து, மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இந்நிலையில், ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 9,10,11 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு மார்க்கமாக தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்று பயணிகளை ஏற்றிச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு சென்று பேருந்தில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இந்த மூன்று நாட்களில் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் நகரத்தின் உட்பகுதிகளான வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளையில் கிழக்குக் கடற்கரை சாலை மற்றும் புதுச்சேரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் வழங்கம்போல் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.