தமிழ்நாடு

தீபாவளிக்கு முன் சரவெடி போல அதிரடியாக ரெய்டு நடத்திய அதிகாரிகள்...

தீபாவளி பண்டிகையையொட்டி அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத 1 கோடியே 12 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

தீபாவளி பண்டிகையையொட்டி அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்சம் மற்றும் பரிசு பொருட்கள் பெறுவதை தடுக்க வருடந்தோறும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சர்ப்ரைஸ் செக் என்ற பெயரில் திடீர் சோதனை மேற்கொள்வது வழக்கம்.

அதே போல இந்த ஆண்டு வருகிற 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி (இன்று) நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மாவட்ட ஆய்வுகுழு அதிகாரிகளுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

குறிப்பாக பத்திர பதிவுத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, தொழில்துறை, வட்டாரப் போக்குவரத்து துறை, தீயணைப்புத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மதுவிலக்கு அமலாக்கத்துறை உட்பட 16 துறைகளைச் சேர்ந்த 46 அலுவலகங்களில் சோதனையானது நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் முடிவில் அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் 1 கோடியே 12 லட்சத்து 57 ஆயிரத்து 803 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அதில்,

திருவாரூர் கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலை விருந்தினர் விடுதியில் இருந்து மட்டும் கணக்கில் காட்டப்படாத 75 லட்சம் ரூபாய் 

நாமக்கலில் நெடுஞ்சாலை உதவி இயக்குனர் அலுவலகத்திலிருந்து 8 லட்சத்தி 87 ஆயிரம் ரூபாய் 

விருதுநகர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் இருந்து மொத்தம் 1 கோடியே 12 லட்சத்து 57 ஆயிரத்து 803 ரூபாய்

பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.