சென்னை பூவிருந்தவல்லியில் இருந்து திருவொற்றியூர் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. தடம் எண் 101 என்ற பதிவெண் கொண்ட மாநகரப் பேருந்து மெதுவாக சென்று கொண்டிருந்தது.
அப்போது மாநிலக்கல்லூரி மற்றும் ஜெயின் கல்லூரி மாணவர்கள் திபுதிபுவென ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கையில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களிடம் இருந்தவர்கள் சண்டைக்கு தயாராக இருப்பது போல தென்பட்டனர்.
மேலும் பேருந்தில் ஆபாசமான வார்த்தைகளைப் போட்டு பாட்டு பாடிக் கொண்டே கலாட்டாவிலும் ஈடுபட்டனர் கல்லூரி மாணவர்கள்.
இதனால் விரக்தியடைந்த பயணிகள் சிலர் அடுத்தடுத்த பேருந்து நிறுத்தத்திலேயே இறங்கிக் கொள்ள, நடத்துநர் மற்றும் ஓட்டுநர் ஆத்திரமடைந்தனர்.
பின்னர் பேருந்தின் இருபுறங்களிலும் உள்ள கதவுகளை மூடினர், அதே நேரம் பேருந்து நடத்துனர், கல்லூரி மாணவர்களை வீடியோ எடுத்து, காவல்துறைக்கும் தகவல் அளித்தார்.
இதையடுத்து விரைந்து சென்ற திருவொற்றியூர் போலீசார் பேருந்தில் இருந்த கல்லூரி மாணவர்கள் அனைவரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துசென்றனர்.
அங்கு அவர்களிடம் இருந்து இரண்டு கத்தியை பறிமுதல் செய்த போலீசார் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பினர். பொது இடங்களில் கல்லூரி மாணவர்கள் புத்தகங்களுக்கு பதிலாக கத்தியுடன் திரிவதும், ஆபாசப் பாடல்களைப் பாடி பிறருக்கு தொல்லை தரும் இதுபோன்ற சம்பவங்களால் மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.