தமிழ்நாடு

இரத்தம் சம்பந்தமான உறவுகள் இருந்தால் சான்றிதழ் வழங்குவதில் பிரச்சனை இல்லை.... கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்!!!

Malaimurasu Seithigal TV

காட்டுநாயக்கர் வகுப்பு மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் முறையான விசாரணையின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சட்டப் பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், திருவெற்றியூர் தொகுதி, 2வது வார்டு, இராமமூர்த்தி நகரில் வசிக்கும் காட்டுநாயக்கர் வகுப்பு மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க அரசு முன்வருமா என சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், ஜாதி சான்றிதழ் வழங்குவதில் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது என்றும், தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில் முறையான விசாரணை அடிப்படையில் ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும், சட்டமன்ற உறுப்பினர் RTO-வை சந்தித்து பேசி உள்ளார் என கூறிய அவர், மொத்தம் 35 காட்டுநாயக்கர் குடும்பங்களில், 25 குடும்பங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதம் இருக்கக்கூடிய குடும்பங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பதிலளித்த அவர் குறிப்பாக, வடசென்னை பகுதியில் மொத்தம் வசிக்கக்கூடிய 282 குடும்பங்களுக்கு ST சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அதில் குறிப்பாக 32 குடும்பங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றும், இருந்த போதிலும் பலர் இடம்பெயர்ந்து வருவதால் சாதி சான்றிதழ் சரியாக இல்லை எனவும், சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளுக்கும் பிரச்சனை உள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக, மத்திய மாநில அரசுக்கு வேலைக்கு செல்லும் போது பிரச்சனை ஏற்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், அப்போது மீண்டும் ஆர்டிஓ அலுவலகத்திற்கு வருகை தந்து தவறான சான்றிதழ் வழங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்படுவதாகவும், இரத்தம் சம்பந்தமான உறவுகள் இருந்தால் சான்றுதல் வழங்குவதில் பிரச்சனை இல்லை என்றும், குறிப்பாக விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கு முறையாக சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதே எண்ணம் எனவும், முறையான ஆவணங்கள் இருந்தால் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் கூறினார்.