ஜனநாயக அமைப்பில் ஒரு நம்பிக்கை அல்லது ஒரு கொள்கை குறித்து இரு வேறு கருத்துக்கள் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும், ஒரே கொள்கையை பின்பற்ற வேண்டும் என அனைவரையும் வற்புறுத்த இயலாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மள்ளர் மீட்பு களத்தின் நிறுவனரும், மீண்டெழும் பாண்டியன் வரலாறு புத்தகத்தின் ஆசிரியருமான செந்தில் மள்ளர் தாக்கல் செய்துள்ள வழக்கில், திராவிட கருத்தியலுக்கு எதிராக "திராவிட ஒழிப்பு மாநாடு" என்ற பெயரில் உள்ளரங்கில் நடத்த திட்டமிட்டு, அதை ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று பூந்தமல்லியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடத்த ஏற்பாடு செய்து இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக அனுமதி கோரி தமிழர் சமுதாய கூட்டமைப்பின் சார்பில் விண்ணப்பித்த நிலையில், காவல்துறை அனுமதி மறுத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, நவம்பர் 1ஆம் தேதியன்று திராவிட ஒழிப்பு மாநாட்டை நடத்த அனுமதி வழங்கவும், 2 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கவும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.விஜயேந்திரன் ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பூந்தமல்லி காவல் ஆய்வாளரிடம் ஆகஸ்ட் 8ஆம் தேதி விண்ணப்பித்ததாகவும், ஆனால் மாநாடு நடக்க இருந்த நாளன்று கடைசி நேரத்தில், அனுமதி மறுத்து காவல் ஆய்வாளர் உத்தரவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டே அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார்
பின்னர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுதாரர் அமைப்பின் கூட்டத்தில் திராவிட கொள்கை குறித்த கருத்துகள் பெரும்பான்மைக்கு விரோதமாக பரிமாறப்படலாம் என்பதற்காக, அவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதை தடை செய்ய கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற அச்சத்திற்காக மட்டும் கருத்து சுதந்திரத்தை தடுக்க முடியாது என்றும், ஜனநாயக அமைப்பில் ஒரு நம்பிக்கை அல்லது ஒரு கொள்கை குறித்து இரு வேறு கருத்துக்கள் இருக்க வாய்ப்புள்ளது என்றும், ஒரே கொள்கையை பின்பற்ற வேண்டும் என அனைவரையும் வற்புறுத்த இயலாது என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.
ஒரு கொள்கை பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை கொண்டிருக்க உரிமை உள்ளதால், திராவிடக் கொள்கை பற்றிய கருத்துக்கு எதிரான கருத்துக்கள் தெரிவிக்கப்படும் என்பதற்காக மட்டும் கூட்டத்தை தடுக்க கூடாது என கூறி, மாநாட்டிற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவை ரத்து செய்தார்.
மேலும் நவம்பர் 1ஆம் தேதி நடத்தவுள்ள கூட்டத்திற்கு அனுமதி கோரி காவல்துறையிடம் புதிதாக விண்ணப்பிக்கும்படி மனுதாரருக்கும், அதற்கு அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டும் வழக்கை முடித்துவைத்துள்ளார். ம்ரேலும், யாரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கக்கூடிய சூழலை யாரும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.