தமிழ்நாடு

இனி காதை கிழிக்கும் ஏர் ஹாரனுக்கு Bye Bye... அதிரடியில் இறங்கிய போக்குவரத்து துறை!

Malaimurasu Seithigal TV

தனியார் பேருந்துகளில் அதிக ஒளி, ஒலி எழுப்பும் உபகரணங்கள் பொருத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் இயக்கப்பட்டு வரும் தனியார் மற்றும் அரசு தடப் பேருந்துகள், உபரிப் பேருந்துகளில் அதிக ஒளி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள் மற்றும் பல ஒளிவிளக்குகள் பொருத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

காற்று ஒலிப்பான்கள் மற்றும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு விதிகளுக்கு புறம்பாக பேருந்துகள் இயக்கப்படுவதாக புகார்கள் குவிந்தவண்ணம் இருந்தன.

அதேபோல், எதிரில் வரும் வாகன ஓட்டுநர் மற்றும் சாலையை உபயோகிப்பவர்களின் கவனத்தை சிதறடிக்கும் வண்ணம் அதிக ஒளி வெளியிடும் முகப்பு விளக்குகள் மற்றும் பல வண்ண ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஒலி எழுப்பான்கள் மற்றும் வண்ண விளக்குகள் பொருத்தப்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகே உபரி பேருந்துகளுக்கு தற்காலிக அனுமதி சீட்டு வழங்கப்பட வேண்டும் எனவும் வாகன சோதனையின் போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.