தமிழ்நாடு

NLC விவகாரம்; மக்களை சந்திக்க கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்களுக்கு தடை!

Malaimurasu Seithigal TV

என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையில் விவசாயிகளை சந்திக்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு எம்எல்ஏக்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

என்எல்சி நிறுவனம் விவசாய நிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளை வளையமாதேவி கிராமத்தில் 6வது நாளாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் வளையமாதேவி கிராமத்தில் விவசாயிகளை சந்திக்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மற்றும் நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆகியோர் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளோடு பார்வையிடுவதற்காகவும் விவசாயிகளை சந்திப்பதற்காகவும் வருகை தந்தனர்.

இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகளை சேத்தியாதோப்பு நான்கு முனை சந்திப்பில் போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் என்று காவல்துறையினர் அனுமதி மறுத்த  நிலையில் சேத்தியாதோப்பு நான்கு முனை சந்திப்பில் விவசாய நிலத்தை அழித்த என்எல்சி நிறுவனத்தை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி கூறுகையில்  என்எல்சி நிறுவனத்தை கண்டித்து வரும் எட்டாம் தேதி கடலூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். தொடர்ச்சியாக தமிழக அரசு இந்த என்எல்சி விவரத்தில் முழு கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.