தமிழ்நாடு

கேரளாவில் பரவும் நிபா வைரஸ்; எல்லைகளை கண்காணிக்க உத்தரவு!

Tamil Selvi Selvakumar

கேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ், தமிழகத்தில் எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிர படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவு.

கேரளாவில் இரண்டு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நிபா வைரஸ் பரவுவதை தடுக்க கேரள எல்லையோர மாவட்டங்களில் சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிர படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

எல்லையோர மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய ஆறு மாவட்டங்களில் 24 x 7 சுழற்சி அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் கண்டறியப்படும் காய்ச்சல் குறித்தான முழு தகவல்களையும் திரட்ட வேண்டும் எனவும், தொடர்ந்து பொது சுகாதாரத்துறைக்கு தகவல் காய்ச்சல் பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

நிபா வைரஸ் பரவல் காரணமாக கேரளாவில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் முழுமையான காய்ச்சல் மற்றும் இதர அறிகுறிகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தமிழக பகுதியில் நுழைய அனுமதிக்க வேண்டும் என  பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.