தமிழ்நாடு

தெற்கு தாய்லாந்து கடல் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...

தெற்கு தாய்லாந்து கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

இதுதொடர்பாக வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, இன்று மாலை தெற்கு அந்தமான் கடற் பகுதிக்கு நகரக்கூடும் என்றும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 2 ஆம்  தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுப்பெற்று 

அதனை அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்று 4 ஆம் தேதி வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்பகுதியை நெருங்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. 

அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கே வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

தற்போது மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மகாராஷ்டிரா - கோவா அரபிக் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.