தமிழீழ தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதை தாங்கள் நம்பவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கருணாநிதி நினைவு சின்னமான பேனா சிலையை அத்துமீறி கடலில் வைத்தால் நாங்கள் அதை உடைத்தே தீருவோம் என கடுமையாக சாடினார்.
இதையும் படிக்க : வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறிய பழ.நெடுமாறன்...மறுக்கும் இலங்கை இராணுவம்!
அதனை தொடர்ந்து மாலை முரசு செய்தியாளர்களுக்கு பிரத்யேக பேட்டியளித்த சீமான், பிரபாகரன் குறித்த பழ.நெடுமாறன் கருத்து தேவையற்றது எனவும், தன்னையும் இதேபோல் அறிவிக்கச் சொல்லி அழுத்தம் வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் தனது குழந்தையை இழந்த பிரபாகரன் 15 ஆண்டுகள் தலைமறைவாக இருக்கமாட்டார், சொல்லுக்கு முன் செயல் என்பதை கற்பித்தவர் பிரபாகரன் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், 13-வது சட்டத்திருத்தத்தால் ஈழ தமிழர்களுக்கு பயன் இருந்தால் ஏன் பிரபாகரன் அதனை எதிர்க்க போகிறார் என கேள்வி எழுப்பிய சீமான், இவ்வளவு பெரிய பேரழிவுக்கு இந்திய - இலங்கை ஒப்பந்தமே காரணம் என தெரிவித்தார். மேலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருந்ததால் 8 ஆண்டுகளாக பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதாக சீமான் குற்றஞ்சாட்டினார்.